ஊனத்தை நீக்கும் ஞானப்பிரான்
ஊனத்தை நீக்கும் ஞானப்பிரான்
ஊனத்தை நீக்கும் ஞானப்பிரான்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டை நாட்டில், பக்தி மணம் கமழும் பல சிறப்பான திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சென்னை- வண்டலூர் அருகே உள்ள ஊனைமாஞ்சேரி கோதண்டராமர் திருக்கோயில் ஆகும். தாம்பரம் அருகே, வண்டலூரிலிருந்து-திருப்போரூர் செல்லும் சாலையில், 5 கி.மீ. தொலைவில் கொளப்பாக்கம் உள்ளது. இவ்வூரை அடுத்து ஊனைமாஞ்சேரி அமைந்துள்ளது. இங்கு செல்ல பஸ் வசதிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் கருணையின் வடிவமான ராமனுக்கு பல திருக்கோயில்கள் உள்ளன. இவற்றில் சில ஆலயங்களில் பட்டாபிஷேகக் கோலத்தில் சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளிக் காட்சி அளிப்பதைக் காணலாம். ஊனைமாஞ்சேரியிலும் பட்டாபிஷேக ராமனாகவே பெருமான் விளங்குகின்றார்.
இவ்வூரின் மேற்கு பகுதியில் திருக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான்! ஆனால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. கோயிலின் பின்னால் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் திருக்குளம் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில்! ஆலய முகப்பினுள் பலிபீடம், அடுத்து தீபஸ்தம்பம் ஆகியன, அழகிய வேலைப்பாட்டுடன் காட்சி தருகின்றன. கம்பத்தின் உச்சிப்பகுதியில் விசேஷ நாட்களில் தீபம் ஏற்றுவார்கள். கம்பத்தின் அடிப்பகுதியில் சங்கு, சக்கரம், பெரிய திருவடியான கருடன், சிறிய திருவடியான அனுமன் ஆகியோரது வடிவங்களைக் காணலாம். இதனை அடுத்து கருடாழ்வார் இறைவனை நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருக்கோயில், முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பு கொண்டு இக்கோயில் விளங்குகிறது. முன் மண்டபத்துத் தூண்களில் திருமாலின் பல்வேறு வடிவங்கள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
நுழைவு வாயில் படிக்கட்டுகள், முன் மண்டபத்தின் இரு புறங்களிலும் அமைந்துள்ளன. இடது புறமாக உள்ளே நுழையும் இடத்தின் அருகே மண்டபத்துச் சுவரில் வராக உருவம், மேற்பகுதியில் சூரியன்-சந்திரன் ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இக்கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
மகா மண்டபத்துத் தூண்களிலும் திருமாலின் பல்வேறு தோற்றங்கள் அழகிய சிற்பங்களாகக் காணப்படுகின்றன. கருவறைக்குச் செல்லும் வாயிற்படியின் மேற்பகுதியில் திருமால் சயனக் கோலத்தில் காட்சி அளிக்கும் சிற்பம் காணப்படுகிறது. அவரது திருவடியின் கீழே ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்கின்றனர்; தலைப்பகுதியில் அனுமன் வழிபடுவது போல காணப்படும் இச்சிற்பம், புதுமையானதாகக் காட்சி அளிக்கிறது.
கருவறையில் "அன்னவர்க்கே சரண் நாங்களே' என்று கம்பர் பெருமான் போற்றும் ராமபிரான், கோதண்டம் என்னும் வில்லை ஏந்தி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். அவருக்கு இடப்புறம் லஷ்மணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமருக்கு வலப்புறம் சீதை! இடது கரத்தில் மலர் ஏந்தி அழகே வடிவாகக் காட்சி தரும் அன்னையின் அற்புதமான கோலத்தைக் கண்டால் மனம் குளிரும். இவர்களுக்கு வலப்புறம் பரதனும், இடப்புறம் சத்ருகனனும் அஞ்சலி செய்த வண்ணம் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு எதிரே அளவற்ற ராம பக்திக்கும், பணிவிற்கும் அடையாளமாக விளங்கும் அனுமன், கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார்.
கருவறையின் மீது ஏக தள விமானம் உள்ளது. இதில் யோக நரசிம்மர், பூவராகமூர்த்தி, காளியமர்த்தன கண்ணன், பரமபதநாதர் ஆகிய திருமாலின் அழகிய சுதை வடிவங்கள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், தேசிகன், குலசேகராழ்வார் வடிவங்கள் வழிபடப் பெறுகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் இக்கோயில் விளங்குகிறது. கோயில் நிர்வாகிகளால் இக்கோயிலில் செப்பேடு ஒன்று பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இச்செப்பேடு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுதராயர் (கி.பி. காலத்தைச் சேர்ந்ததாகும். செப்பேட்டில் இவ்வூர் "உகினை' என்றும், "அச்சுதேந்திர மகாராயபுரம்' எனவும் வழங்கப்படுகிறது. இச்செப்பேட்டின் இணைக்கும் வளையத்தில் வராகம் (பன்றி), கட்டாரி, சூரியன்-சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள விஜயநகர அரசு முத்திரை காணப்படுகிறது. இதே போன்ற அரச முத்திரை, கோயிலின் முன் மண்டபத்திலும், கருவறையிலும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வூர் "திம்ம சமுத்திரம்' எனவும் அழைக்கப்படுகிறது. விஜயநகர மன்னர்கள் காலத்தில் பல ஊர்கள் "சமுத்திரம்' என்ற பெயரோடு வழங்கப்பட்டு வந்தன. திருப்பதி திருக்கோயிலிலிருந்து இக்கோயிலுக்கு குடை, பெருமாளுக்கு வஸ்திரங்கள் ஆகியவை வந்து கொண்டிருந்தன எனவும், பின்னர் அவை நின்று போய்விட்டதாகவும் ஊரார் கூறுகின்றனர். அத்தகைய பெருமை உடையது இத்திருக்கோயில்!
பக்தர் ஒருவருக்கு ஏற்பட்ட ஊனத்தை இங்கு கோயில் கொண்டுள்ள ராகவன் போக்கியதால் ஊனைமாஞ்சேரி (ஊனம் மாய்தல் சேரி) என அழைக்கின்றனர். ஊனத்தை நீக்கும் ஞானப்பிரானாகிய சக்ரவர்த்தி திருமகன் குடிகொண்டுள்ள இத் திருக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சம்ப்ரோக்ஷண வைபவம் நடைபெற உள்ளது.