Thula Utsavam - Theerthavari - துலா உற்சவம் - கடைமுழுக்குத் தீர்த்தவாரி

Thula Utsavam - Theerthavari - துலா உற்சவம் - கடைமுழுக்குத் தீர்த்தவாரி

Thula Utsavam - Theerthavari - துலா உற்சவம் -

கடைமுழுக்குத் தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவத் தீர்த்தவாரித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

ஐப்பசி மாதம் என்றாலே 'புண்ணிய நீராடுதல்'தான் நினைவிற்கு வரும். குறிப்பாக ஐப்பசி மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதலை 'துலா ஸ்நானம்' என்பர்.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கிறார். இதனால், ஐப்பசி மாதத்திற்கு 'துலா மாதம்' என்ற பெயருண்டு.

குறிப்பாக துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடுவது விசேஷம் என்பதால் 'துலாக் காவிரி முழுக்கு' என்பது சிறப்பான வைபவம் ஆயிற்று.

'ஐப்பசி மாதத்தில்தான் அகத்திய நாண்மீன் உதயமாகின்றது. இதனால் அப்புனிதநீர் தூய்மை அடைகின்றது 'என்பது சாஸ்திர நூல்கள் அளிக்கும் விளக்கம்.

அகத்திய மாமுனியின் மனைவியான லோபாமுத்திரையே அப்பெருமானின்  கமண்டலத்தில் தீர்த்தமாக உறைந்திருந்ததாகவும், லோக ஷேமத்திற்காக விநாயகர் பெருமானின் அருளால் காவிரியாக விரிந்து பெருகியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

'கங்கையிற் புனிதமாய காவிரி' யில் அதிகாலை புனித நீராடல் செய்வதால் கிடைக்கும் அளப்பறிய பலன்களை காவிரி மகாத்மியம் சிறப்பாகப் பேசுகிறது.

பல்வேறு புண்ணிய தலங்களைத் தன் கரையில் கொண்டுள்ள காவிரி நதி, சமுத்திரத்தில் கலக்கும் இடத்திற்கு அருகில், நிறைவாக துலா தீர்த்தக் கட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவில் அமைந்துள்ளது. இந்தவகையில்  இங்கு புண்ணிய நீராடுதல் 'கடைமுழுக்கு' என்பதற்குரியதாகிறது.

ஐப்பசியில் மயிலாடுதுறை காவிரியின்  இடது தீர்த்தக்கரையில் கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள் ஒருமித்துக் கூடுவதாக ஐதிகம். ஐப்பசி மாதம் முப்பது நாள்களும் நீராட இயலாதவர்கள், முதல்நாளும், கடைநாளும் நீராடுவர்.

இப்புண்ணிய நதியின் கரையில் செய்யப்பெறும் நீத்தார்  வழிபாடுகளை  அவர்களே நேரடியாக மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம். 'கங்கைக்கு நிகரான புண்ணிய நதி காவிரி மட்டுமே. அதனாலேயே இவள் 'தக்ஷிணகங்கை' , உத்திர வாஹினி' என்றெல்லாம் போற்றப் பெறுகிறாள்.மற்ற எல்லா புண்ணிய நதிகளும் தத்தமது பாவங்களை  காவியியில் நீராடி  போக்கிக் கொள்கின்றன' என்பது சாஸ்திரம்.

கடைமுழுக்கில் நீராடியோர் பாவங்களை ஏற்கும் காவிரியன்னை திருமங்கலக்குடியில் வழிபட்டு  இதிலிருந்து விமோசனம் பெறுவதாக ஐதிகம். தென்னக ஆலயங்கள் தோறும் கற்றிருமேனியளாக  வழிபடப்பெறும் பெருமை காவிரி அன்னைக்கே உண்டு.