குறை நீக்கும் கூனஞ்சேரி

குறை நீக்கும் கூனஞ்சேரி

குறை நீக்கும் கூனஞ்சேரி

அடியவர்தம் உள்ளக் குறைகளை தீர்க்கும் இறை சந்நிதானமே திருக்கோயில்கள். அதிலும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கூனஞ்சேரியில் அமைந்துள்ள கைலாசநாத சுவாமி திருக்கோயிலோ உள்ளக் குறைகளுடன், உடல் குறைபாடுகளையும் தீர்க்கும் பெரும் திருத்தலமாக விளங்குகிறது. அதனால் இவ்வூரை கூனன்சேரி, கூன்நிமிர்ந்த புரம் எனத் தல புராணங்கள் சிறப்பிக்கின்றன. 
சோழ வளநாட்டில் பழவாற்றங்கரையில் சுவாமிமலை, திருவைகாவூர், வைணவ திவ்ய தேசங்களான ஆதனூர், புள்ளப்பூதங்குடி ஆகிய புகழ்பெற்ற ஊர்களின் அருகே இவ்வூர் அமைந்துள்ளது
மூலவர் ஸ்ரீகைலாசநாதருடன் இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீ பார்வதி அம்பாள், தெற்கு முகமாகவும், ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் கிழக்கு முகமாகவும் பக்தர்களுக்கு வரமளித்து அருள்பாலிக்கின்றனர். 
சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. அவரை "எண் குணத்தான்' என்று புராணங்களும், சைவத் திருமுறைகளும் போற்றுகின்றன. இக்கோயிலில் இன்னொரு முக்கியமான அம்சமாக ஸ்ரீ அஷ்டகோண மகரிஷி பூஜித்த அஷ்டலிங்கங்கள் (8 லிங்கங்கள்) நம் குறைகளை, உடல் ஊனங்களைப் போக்கி அருள்புரிய இக்கோயிலில் காத்து நிற்கின்றன.
பல காலங்களாக மிகச் சிறப்பாக வழிபாடுகள் மற்றும் உத்சவங்கள் நடைபெற்ற இவ்வாலயம், கால மாறுதல்களால் மிகவும் சிதிலமடைந்தது. தற்போது பல ஆன்மீக அன்பர்களின் உதவியால் பல சந்நிதிகளும் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டுள்ளது செய்ய வேண்டிய திருப்பணிகள் சில மீதமுள்ளன. காலமோ மிகக் குறைவாக உள்ளது. பல்லாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதைக் கண்ணுறும் பக்தர்கள் இந்நற்காரியத்திற்குப் பொருளுதவி செய்து திருப்பணியைப் பூர்த்தி செய்து கொடுத்து, ஈசனின் அருட்பார்வை பெற்று மகிழக் கேட்டுக் கொள்கிறோம்.