கிரஹண தோஷம் நீக்கும் அனுமன்
கிரஹண தோஷம் நீக்கும் அனுமன்
கிரஹண தோஷம் நீக்கும் அனுமன்
தஞ்சாவூர், மேலவீதியில் மூலை அனுமார்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் ஸ்ரீ பிரதாப சிம்மனால் (கி.பி. 1739-1763) கட்டப்பட்டது. பொதுவாகவே ஆஞ்சநேயர், ஈஸ்வரன் அம்சம் உடையவராகக் கருதப்படுகிறார். நரசிம்மம், வராகம், கருடன் ஆகிய சக்திகள் ஒருங்கே இவரிடம் உள்ளன. இவருடைய வாலில் நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட தலம் என்ற பெருமையை தஞ்சை மூலை அனுமார் பெற்றுள்ளார். இவர் நோய்கள் பல தீர்க்கும் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்தவர். இந்த அனுமனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த நல் காரியங்களில் வெற்றியைத் தந்து, தீராத நோய்களையும் தீர்த்து வைத்து அருள்பாலித்து வருகிறார்
அல்லல் போக்கும் அமாவாசை அனுமார் :
ஒவ்வொரு அமாவாசைதோறும் மூலை அனுமாரை "ராம, ராம' என்று மனதால் உச்சரித்தபடி வலம் வந்து, சிதறு தேங்காய் உடைத்துச் செல்வது பக்தர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. பிரதி அமாவாசைதோறும் இப்படி வழிபடும் பக்தர்களுக்கு ஒரு வித சூட்சுமமான அருட்சக்தியின் அலைகள் கிடைக்கப் பெறுகிறது.
18 அமாவாசைகள் தொடர்ந்து வழிபடுகின்றவர்களுக்கு எண்ணியவை எண்ணியாங்கு நடைபெறுகின்றன; அல்லல்கள் நீங்கி மன நிம்மதி கிடைக்கிறது.
எலுமிச்சைப் பழ பிரியர்! அமாவாசை தினங்களில் மூலை அனுமாருக்கு 18, 56, 108, 1008 என்ற எண்ணிக்கைகளில் எலுமிச்சைப் பழ மாலைகள் சாற்றி வழிபடுவது சிறப்பு. ஆடி அமாவாசையன்று 10,080 எலுமிச்சைப் பழங்கள் கொண்ட மாலை இவருக்குச் சாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து வழிபட்டால் எம பயம் விலகும்; விபத்துக்கள் அண்டாது; நவக்கிரஹ மற்றும் வாஸ்து தோஷம் விலகும். அமாவாசை அன்று புதிய மஞ்சள் துணியில் திரி போட்டு, 18 எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் போன்றவை அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாஸ்து தோஷம் போக்குபவர்!
தீவிர ராம பக்தராகிய அனுமனுக்கு வாஸ்து முறைப்படி வடமேற்கு மூலையில் மூலை அனுமார் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆஞ்சநேயர், வாஸ்து தோஷம் நீக்குபவராகத் திகழ்கின்றார். புதியதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோஷம் இருப்பதாகக் கருதுபவர்களும் அமாவாசை அன்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து, தல விருட்சமாகத் திகழும் வேப்ப மரத்தடியில் வைத்து தோஷம் நீங்க வேண்டுவர். கூடவே எலுமிச்சைப் பழ மாலை சாற்றி வழிபடுவர். சொந்த வீடற்றவர்கள் பலருக்கு இவரால் "கிரஹப் பிரவேசம்' செய்யும் யோகம் கிட்டியுள்ளது.
ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு :
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் வருகின்ற 21-ம் தேதி (21.7.2009) ஆடி அமாவாசை அன்று, காலை 10.00 மணிக்கு, வறுமை மற்றும் கடன் தொல்லையைப் போக்கும் தேங்காய்த் துருவல் அபிஷேகமும், மாலை 6.00 மணிக்கு 10,080 எலுமிச்சைப் பழ மாலைகளாலான சிறப்பு அலங்காரச் சேவையும் நடைபெறுகின்றன.
சூரிய கிரஹண தோஷ நிவர்த்தி : இக்கோயிலில் சூரியன், சந்திரனை ராகு-கேது கவ்விப் பிடிப்பது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. வருகின்ற 22ஆம் தேதி சூரிய கிரஹணத்தை முன்னிட்டு காலை 8.00 மணி அளவில், "சூரிய கிரஹண தோஷ நிவர்த்தி அபிஷேகம்' நடைபெறுகிறது. புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இதில் கலந்து கொண்டு சாந்தி செய்து கொள்வது உத்தமம். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜா பாபாஜி போன்ஸ்லேயின் மேற்பார்வையில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் சிவாஜி மற்றும் அமாவாசை வழிபாட்டு விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- தஞ்சை சுரேஷ்